ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஒரு போராளியின் கதை.


"நான் கவிதை எழுதி நிறைய நாளாயிட்டுது" எண்டு கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். இன்னமும் நான் ஏதும் அண்மையில் கவிதையாய் எழுதவில்லை. இது ஒரு பழங்கவிதை. எழுதி பல வருடங்கள் இருக்கும்.
இன்னமும் நான் எழுதியதில் முழுமையான கவிதை என்று நம்பும் ஒரு சிலவில் இது ஒன்று.


எனக்கு கவிதை என்பது
பிள்ளையார் பிடிக்கிற மாதிரி
பிள்ளையார் தவிர வேறு
எல்லார் மாதிரியும் வரும்
நான் எதை பிடிக்க முயன்றேன்
என்பதை சொல்லாத வரை
எல்லாம் கவிதை என்று
நம்ப சிலர் இருக்குறீர்கள் என்ற நபிக்கையுடன்.
இது ஒரு போராளியின் காதல் கதை!

திங்கள், ஏப்ரல் 23, 2012

காதலிக்க நேரமில்லை. III வேலை

முந்தய பாகம்

வேலை


கடைசியாகக்
காதலிக்கலாம் என்று தீர்மானித்தேன்
அதற்காக இவ்வளவு நாளும்
"காதல் வேண்டாம்" என்று தவம் கொண்டிருக்க வில்லை.



இனி காரட்டை சாப்பிட்டே ஆவது என்று முடிவெடுத்தேன்.
கவிதை எழுதி கன நாள் ஆயிட்டுது.
என்னைப் போலத்தான் என் நண்பன் ஒருவனும்.
இனிக காதலிப்பது என்று தீர்மானமாக இருக்குறான்.
அவன் வெள்ளிக்கிழமை தவறாது கோவிலுக்குப் போகிறான்.

என்னையும் வரச் சொல்வான்.
எனக்கும் விருப்பம் தான்.
அனால் வேலை அவசரத்தில் வெள்ளி மறந்துவிடும்.
அதற்குப் பிறகு சனி ஞாயிறு மச்சம்.
செவ்வாயும் போகலாம் தான்.
அதென்னமோ வெள்ளி விசேசம்தான்.

கவிதை எழுதி கன நாள் ஆயிட்டுது.

முற்றும்

எழுதியது: செப்டெம்பர் 2005 


மச்சம் என்பது கடலுணவுகளை குறிப்பினும் மாமிச உணவுகள் என்று பொதுமைப் படுத்துவது எங்கள் பேச்சு வழமை.

வியாழன், ஏப்ரல் 19, 2012

காதலிக்க நேரமில்லை. II கம்பஸ்

முந்தய பாகம்.
கடைசியாக
காதலிக்கலாம் என்று
தீர்மானித்தேன் !

அதற்காக
இவ்வளவுநாளும் காதல் வேண்டம் என்று
தவம் கொண்டிருக்கவில்லை.

இனி காதலை தேடி அலைந்தாவது
கைப்பற்ற தீர்மானித்தேன்.


இங்கு எல்லாமே புதிதாக இருந்தது,
புதிராகவும்....
எதுவும் செய்யக்கூடாது என்றார்கள்
நீயாச் செய்யோணும் எண்டார்கள்.
நாங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள்.
நாங்கள் சொல்வதாலேயே மறுக்கவும் செய்தார்கள்.

இங்கு எல்லாமே புதிதாக இருந்தது,
புதிராகவும்....


கொஞ்சம் ஆசை
கொஞ்சம் அன்பு
கொஞ்சம் குறும்பு
கொஞ்சம் கண்டிப்புடன் சில அக்காமார்
அத்தோடு லிமிட் தெரிந்து நெருங்கும் சிங்கள நண்பிகள்
மற்றும் நண்பிகள்.

நான் தெரியும் வரைக்கும்
அதிகம் நனையாமல் இருந்தேன்.
தேன் சுவை அறியாக் கரண்டி.....


நான் தெரியும் வரைக்கும்
அதிகம் நனையாமல் இருந்தேன்.
நீங்கள் தான் "உதயா அண்ணாவா?" என்று ஒரு குயில் கூவும் வரை.

அந்தக் கடற்கரையில்
எந்த சுனாமியும்
அண்மையில் வந்ததை தெரியவில்லை.

அடிக்கடி முரண்பட்ட கல்யாணிக்கும்
இவளுக்கும்
அதிகம் வித்தியாசம் இருந்தது.



இவள் அழகு என்று சொல்லமுடியாது
அவளைப் போல்
இவள் அழகு என்று சொல்லமுடியாது
அனாலும் இவளிடம் ஒரு attraction இருந்தது.

இவளும் முரண்பட்டாள்,
அனால் எப்போதும் அல்ல.
ஏற்றும் கொண்டாள்.
சில சமயம் இதுவுமன்றி அதுவுமன்றி.

புரியவில்லை என்றாள்,
புரிந்து கொள்ள முயற்சிசெய்தாள்.
புரியவைத்தாள்.

ஆத்தாளை
அந்த அபிராமவல்லியை
அங்கமெல்லாம் பூத்தாளை,
என் புவி அடங்கக் காத்தாளை,
அங்குச பாசங்குசம் கரும்பும் அங்கை சேர்த்தாளை,
முக்கண்ணியை - முக்கனியை
தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையோ ?

எனக்கு
இந்த தேவாரத்தையும்
அபிராமவல்லியையும் பிடித்துப் போயிற்று.

அவலை பார்க்கிற போது
நினைக்கிற போது எனக்குள் ஒரு பாடல்.
அப்போ அச்சர சுத்தமாய் ஒலித்தாலும்
பிறகு இருந்து வார்த்தை தேடியும் கிடைக்க வில்லை.

ஓரிரு ஏகாந்த வேளையில்
எங்கள் வீட்டு தலை வாசலில் தொங்கும் சிப்பி சோகிகளை
அசைத்து தென்றல் என்னை அழைத்து செல்லும்.
மூடில் இருந்தால்
அந்த தென்னை மரத்துக் குயில்
அந்தப் பாடலைப் பாடும் போது
எடுத்த குறிப்புகளை ஒன்று திரட்டி வைத்திருந்தேன்.



டிரேனிங்கோடு அதுவும் காணமல் போனது.
Training இக்கு பிறகு
கலைவிழா தமிழருவிப் புத்தகத்தில்
"சிலுவைக்கு செய்வோம் சங்காபிடேகம் "
என்ற கவிதையை அபிராம்சன் என்பவன் அல்லது என்பவள் எழுதியிருந்தான்/ள்.
எனக்கு யாரென்று அறியும் ஆர்வம் நேரத்தோடு வற்றிற்று.
தேவையுமில்லை என்றாகியது.
பிறிதொருநாள் கண்டீனில் கண்டுகொண்டேன்.


எழுதியது: செப்டெம்பர் 2005
இனி வேலை....